தொகுப்பு

Archive for 2010-01-08

கரூர் கலெக்டரின் சிறந்த அறிவுரை

Dr. J.UmaMaheswari, Collector of Karurகுடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது –
கரூர் மாவட்ட கலெக்டர் முனைவர். ஜே. உமாமஹேஸ்வரி பேச்சு

கரூர், ஜன.1 – 2010. தினத்தந்தி

குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

கருத்தரங்கு

கரூர் மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் மாவட்ட அளவில் முன்மாதிரி கல்வியாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. கரூர் ஆர்த்தி ஓட்டலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு எச்.ஐ.வி.உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார்.

சப்-கலெக்டர் ஹனீஸ் சாப்ரா, போலீஸ் துணை சூப்பிரண்டு ஞானசிவக்குமார், திட்ட அதிகாரி கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குருராஜன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சதாசிவம், தாசில்தார் தர்மராஜ், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர், தாட்கோ திட்ட இயக்குனர் அகோராநாதன், குளோபல் மனித உரிமை பாதுகாப்பு கழக தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தடுக்க வேண்டும்

எய்ட்ஸ் நோயை முற்றிலும் தடுக்க வேண்டும். எச்.ஐ.வி. இல்லாத உலகத்தை படைக்க வேண்டும். இந்த நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நல்ல ஒழுக்கத்தால் இந்த நோயை முழுவதும் தடுக்கலாம். பெண்கள் வீட்டின் சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டும்.

அதே போன்று நமக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று வருமானத்தை பெருக்கி கொள்ளவும் வேண்டும். அதிக அளவில் வருமானம் இல்லாத கணவனிடம் தேவைக்கு அதிகமான பொருட்கள் வாங்கி கொடுக் கும்படி வற்புறுத்தக்கூடாது.

கணவன்களிடம் எப்போதும் சண்டை போடக் கூடாது. சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

கற்றுக்கொள்ள வேண்டும்

ஒரு குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது. இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று கணவன்மார்களின் உறவினர்களை பார்த்து மனைவிகள் பலர் மதிப்பது இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.

சில பெண்கள் வீட்டின் சூழ்நிலையை சரியாக அமைக்காததால் தான் ஆண்கள் தடம் மாறுகிறார்கள். கண வன்- மனைவி இடையே சண்டை ஏற்படும் போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும்.

கலாசார சீரழிவு

இருட்டு ஏற்பட்டு விட்டது என்று நொந்துகொள்வதை விட அந்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி ஒளியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். எந்த நோயும் வரும்முன் காப்பது நல்லது.

நான் நல்லவன் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். தற்போது அதிக அளவில் கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்க கூடாது. தவறு செய்யாமல் யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கருத்தரங்கிற்கு வந்தவர்களை எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பு செயலாளர் உமா வரவேற்றுப்பேசினார். முடிவில் மாவட்ட திட்ட அலுவலர் கோமதி நன்றி கூறினார்.

Advertisements