தொகுப்பு

Archive for 2010-01-02

சர்வ ரோக நிவாரணி

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் பின்னங்காலை தூக்கிக் கொண்டுதான் ஓடுமாம். அதுபோல் குடும்பத்தில் எந்தவித பிரச்னை இருந்தாலும் மனைவி கையிலெடுப்பது “வரதட்சணை கேசு” என்று பரவலாக அறியப்படும் 498A சட்டம் தான்.

  • ”கணவன் என்னை குண்டாக இருப்பதாக கேலி செய்கிறான்” – போடு வரதட்சணை கேசு
  • ”கருமேனியை சிவப்பாக்கும் கிரீம் வாங்கக் கூடாது என்றான்” – போடு வரதட்சணை கேசு
  • “மாமியாருக்கு போய் என்னை சோறு போடச் சொல்கிறான்” – போடு வரதட்சணை கேசு
  • “தன் தங்கைக்கு பணம் அனுப்புகிறான்” – போடு வரதட்சணை கேசு
  • “தனிக்குடித்தனம் வர மறுக்கிறான்” – இறுக்கிப் போடு வரதட்சணை கேசை; தானே நாய் மாதிரி வழிக்கு வருகிறானா இல்லையா பார்!
  • ”என் பெற்றோரின் சொல்படி அடிமையாக நடக்க மறுக்கிறான்” – அவன் மட்டுமில்லை அவனைப் பெத்தவளையும், ”தான் என்னமோ பெரிய அழகி” என்று நினைக்கும் அந்த ராங்கிக்கார நாத்தியையும் சேர்த்து உன் காலில் விழ வைக்கலாம்; எடு வரதட்ணைப் புகாரை!

அந்த 498A சட்டப்பிரிவின் வசதி அப்படி. புகார் கொடுத்தவுடனேயே கணவனையும், மாமியாரையும் (”ராட்சசி! கொல்லணும் அவளை!!”), நாத்தனாரையும் (அவள் என்ன செய்தாளா? கணவனுடன் பிறந்திருக்கிறாளே, அது போதாதா?), அவளுடைய 2 மாதக் குழந்தையையும் (‘பாவம், அது என்ன செய்தது’ என்று கேட்காதீர்கள். பழி வாங்குவது என்று இறங்கிய பிறகு இதுபோன்ற இரக்க உணர்ச்சிகளுக்கெல்லாம் லவலேசமும் இடமில்லை. சட்டத்தில் என்னென்ன இண்டு இடுக்கு இருக்கிறதோ அத்தனையிலும் போடு வழக்கை!) புகாரில் கோர்த்து, ”வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார்கள்” என்பதுடன் கூட ஏலக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு மசாலா சேர்ப்பது போல, “செக்ஸ் படம் பார்த்தார்கள், என்னை கற்பழித்தார்கள், 2 வயது பையன் என்னைக் கையைப் பிடித்து இழுத்தான்” என்று பலவித குற்றப்பிரிவுகளை ஜோடனை செய்து சேர்த்து பொய் வழக்குப் பதிவு செய்துவிட்டால் வேலை சுளுவாக முடிந்து விடுகிறது.

இதற்கென்றே ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் நிறைய உள்ளனர். அவர்களில் பலர் மக்களுக்கு நல்வழி காட்டும் உன்னத சேவையாக, மனிதநேய போதனை, கீதோபதேசம் என்று கூட்டத்திற்கு கூட்டம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக வலம் வருகிறவர்கள். அவர்கள் இதுபோல் 498ஏ கேசு போடுவதேற்கென்றே பலவித டெம்பிளேட்களை கைவசம் வைத்திருப்பார்கள். நீங்கள் பிடித்தமானதைத் தெரிவு செய்து கொள்ளலாம். அவ்வித புருடா கதையின் ஆழ அகல வீச்சுக்குத் தகுந்தாற்போல் ஃபீஸ் கூடும். அதனாலென்ன, அதான் கணவன் வீட்டிலிருந்து கறக்கப் போகிறோமே!

இனி செய்தி:

வரதட்சணை சட்டத்தில் வழக்குப்பதிவு – ”குண்டாக இருப்பதால் ஒதுக்கி வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு”

கணவர் மீது பெண் டாக்டர் பரபரப்பு புகார்

சென்னை, ஜனவரி.2 – 2010. செய்தி – தினத்தந்தி

குண்டாக இருப்பதால் ஒதுக்கி வைத்துவிட்டதாக கணவர் மீது, பெண் டாக்டர் ஒருவர் பரபரப்பான புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரையொட்டி, வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டாக்டர் அனுசுதா

சென்னை ராமாபுரம், கிரி நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் டாக்டர் அனுசுதா (வயது 29). இவர், சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். இவருக்கும், கோவையை சேர்ந்த டாக்டர் மோகன்குமார் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக நடந்த இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு டாக்டர் அனுசுதா, தனது கணவர் டாக்டர் மோகன்குமார் மீது சென்னை வடபழனி பெண் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

விவாகரத்து நோட்டீசு

எனது திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. நான் இயற்கையாகவே குண்டாக இருப்பேன். என்னை பார்த்துதான், எனது கணவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்துக்கு பிறகு அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார். குண்டாக இருப்பதாக எனது கணவரும், அவரது குடும்பத்தினரும் என்னை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். எனது கணவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டதால் குழந்தையும் இல்லை.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து எனது கணவர் அங்கு போய்விட்டார். என்னை தனிமையில் தவிக்கவிட்டு சென்ற அவர், விவாகரத்து கேட்டு இப்போது நோட்டீசு அனுப்பியுள்ளார். குண்டான பெண் என்று காரணம் காட்டி எனது வாழ்க்கையை சீரழித்த எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அனுசுதா தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த புகார் தொடர்பாக வடபழனி உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில், பெண் போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள். தற்போது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

புகார் மனுவே இனி எஃப்.ஐ.ஆர்

இது இந்திய மக்களுக்கு அரசு அளித்திருக்கும் ஒரு புத்தாண்டுப் பரிசு!

இந்த உத்தரவின்படி ஒரு காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் எந்த எழுத்துவடிவ புகாரும் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்படும். சட்டப்படி அத்தகைய எஃப்.ஐ.ஆரின் நகல் புகார் கொடுத்தவருக்கு கொடுக்கப்பட வேண்டும். தவிர அது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இன்னொரு முக்கிய விஷயம்: ”எஃப்.ஐ.ஆர்” என்பது பொது மக்கள் அறியக் கிடைக்கும் பொதுவான ஆவணம். இதைப் பார்த்துத்தான் பத்திரிக்கைகள் குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. இதைப் பார்வையிட எந்தக் குடிமகனுக்கும் உரிமை உண்டு (FIR is a public document prepared U/S 154 Criminal Procedure Code). FIR பற்றிய மேலதிக விவரம் அறிய இந்த தளத்திற்குச் செல்க.

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எவரைப் பற்றி வேண்டுமானாலும், எந்தப் புகார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் விசாரனையில் அந்தப் புகார் பொய் என்று நிரூபணம் ஆனால் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை சிறை வாசம் தண்டனையாக வழங்கப்படும் என்றும் சட்டம் வருகிறது. (Govt plans punitive action against filing false FIRs)

இத்தகைய அரசாணைகளால் மக்களுக்கு மிக்க நன்மை கிட்டும். பொய்க் கேசு கொடுக்க பயப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் வரதட்சணை கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் இரு சாராரும் குற்றவாளிகள் என்று சட்டம் வரையறுத்திருக்கும் போது வரதட்சணை ஒருவர் கேட்டதாக புகார் கொடுத்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கைது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் தான் வரதட்சனை கொடுத்தாக கைப்பட எழுதிக் கொடுத்திருக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கு கிறார்கள். இனிமேல் அது முடியாது. உடனடியாக அவர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்னும் சூழல் உருவாகிறது.

மேற்குறிப்பிட்ட ஆணைகளை நடுநிலையாளர்கள் அனைவரும் வரவேற்பர். இதனால் பணம் பறிப்பு பொய் 498A புகார்கள் (498A Extortion racket) பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

இனி செய்தி:-

ஜனவரி 01,2010. தினமலர்.

புதுடில்லி: இனி, “போலீஸ் நிலையத்துக்கு வரும் அனைத்து புகார்களையும் எப்.ஐ.ஆர்., ஆக (முதல் தகவல் அறிக்கையாக) பதிவு செய்ய வேண்டும்’ என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா தற்கொலை வழக்கில் கைதான முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர் மீது, ருச்சிகா தற்கொலை செய்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் ஐகோர்ட் உத்தரவு வந்தபிறகே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப் பட்டது. ருச்சிகாவின் பெற்றோர், ரத்தோர் மீது புகார் அளித்த போது அதை வாங்க போலீசார் மறுத்து விட்டனர். அதோடு, ரத்தோருக்கு ஆதரவாகவும் சில போலீசார் செயல்பட்டுள்ளனர். ருச்சிகாவின் சகோதரர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதற்காகவும், போலீசார் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்கள் ஒரு புகார் மீதான பதிவு எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், “போலீஸ் நிலையத்துக்கு வரும் அத்தனை புகார்களையும் எப்.ஐ.ஆர்., ஆகப் பதிவு செய்ய வேண்டும்’ என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், “புகாரைப் பதிவு செய்யும் போது என்ன காரணத்துக்காக எப்.ஐ.ஆர்., போடப்படுகிறது என்பதையும், அப்படி எப்.ஐ.ஆர்., போட முடியவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்’ என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்துப் புகார்களும் எப்.ஐ.ஆர்., ஆகப் பதிவு செய்வதை இந்த உத்தரவு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், புகார் தவறானது என்றால் எப்.ஐ.ஆர்., பதிவு செய்த பின்பே அது பற்றி விசாரிக்க வேண்டும். இதனால், உள்நோக்கத்துடன் புகார் அளிப்பது குறையும் என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன. பொதுவாக அதிகாரம் மற்றும் அரசியல் வட்டங்களின் நெருக்குதலால் வெறும் பேருக்கு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவதும், பதிவே செய்ய மறுக்கப்படுவதும் இனி நடக்காது. இதுவரை பழங்குடியினர் மீதான தாக்குதல்களுக்கு எப்.ஐ.ஆர்., போடாமலே தட்டிக் கழித்து வந்ததைப் போல, இனி எப்.ஐ. ஆர்., பதிவு செய்யாமல் தட்டிக்கழிக்க முடியாது. பல்வேறு வகைகளிலும் பொதுமக்களுக்கு நன்மையைச் செய்யும் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு, இன்னும் ஒரு வாரத்துக்குள் அமலுக்கு வரும் என்று தெரிய வருகிறது.

குற்றத்தில் சிக்கினால் மெடல் பறிபோகும்: ருச்சிகா வழக்கில் கைதான ரத்தோர், தனது சிறந்த பணிக்காக வாங்கியுள்ள பதக்கத்தைப் பறிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வரும் 4ம் தேதி கூடவுள்ள மத்திய அவார்டு கமிட்டியில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். இதைத் தொடர்ந்து, குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்ட உயரதிகாரிகள் எந்தத் துறையைச் சார்ந்தவராய் இருப்பினும், அவருக்கு கவுரவம் அளிக்கும் விதத்தில் வழங்கப்பட்ட பதக்கங்கள் மற்றும் வீரதீர விருதுகளைப் பறிக்க வழிவகை செய்யும் புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க இருக்கிறது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தனது பணிக்கு இழுக்கு நேரும் வகையிலோ அல்லது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலோ அல்லது அப்படி ஜனாதிபதியால் கருதப்பட்டாலோ கூட, ஒருவர் பெற்றிருக்கின்ற பதக்கம் மற்றும் வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் பறிக்கப்படும்’ என்றார். இது அமல்படுத்தப்பட்டால், குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்ட உயரதிகாரியின் பதக்கம் தானாகவே பறிக்கப்பட்டு விடும்.