தொகுப்பு

Archive for திசெம்பர், 2009

கைது செய்தால் கவலை தீரும்!

தன் குழந்தைகளைக் கொன்றாள் தாய்? எதற்கு? தன் கணவனுடன் தகராறு, அதனால். தாயும் தற்கொலை செய்து கொண்டாள். சரி. அந்தத் தந்தைக்கு தன் குழந்தைகளை இழந்த துக்கம் நிச்சயம் இருக்கும் அல்லவா? அதைப் போக்க காவல் துறையும் சட்டங்களும் ஒரு சிறந்த மருந்து வைத்திருக்கின்றன.

அது என்ன தெரியுமா? அந்தத் தகப்பனை சும்மா விட்டால் தானே அவன் தன் குழந்தைகளை இழந்ததற்காக கவலைப் பட்டு அழுதுகொண்டு கிடப்பான். அவனைக் கைது செய்து விட்டால்? போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, வக்கீல் வீடு, சிறைச்சாலை என்று பிசியாக, மற்ற விசனங்களை மறந்து அலைந்து கொண்டிருப்பான் இல்லையா?

ஆகா, நல்ல யோசனையாக இருக்கிறதே! இதுபோல் இந்த நாட்டிலுள்ள அனைத்து ஆண்களையும் ஏதாவது காரணத்திற்காக கைது செய்து உள்ளே தள்ளி விட்டால் நம் சமுதாயத்தில் குற்றமே நடக்காதே!!

Let us hope for that Utopia!

இப்பொது செய்தி:

மனைவி, குழந்தை பலி எதிரொலி: தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது

தேனி,டிச.29 – 2009. செய்தி – தினத்தந்தி

தேனியில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது 8 மாத பெண் குழந்தை மற்றும் 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்தார். இதில் அந்த பெண்ணும், 8 மாத குழந்தையும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனை அடுத்து அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:-

கணவருடன் தகராறு

தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (வயது35). இவர் தங்க நகை வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளா(31). இவர்களுக்கு ராஜபாரதி என்ற 6 வயது மகளும், அகிலா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. இதில் ராஜபாரதி அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கண்ணனின் தாயார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதற்கு தனது மனைவி பரிமளா சரியாக தனது தாயாரை கவனிக்கவில்லை, அதனால்தான் அவர் இறந்து விட்டார் என்று கண்ணன் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பரிமளா கடந்த 22-ந் தேதி அன்று பகலில் தனது மூத்த மகள் ராஜபாரதி மற்றும் 8 மாத குழந்தை அகிலாவுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்தார்.

கணவர் கைது

இதில் தாய் பரிமளா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலும், 8 மாத குழந்தை அகிலா தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி, ஏட்டு செந்தில் ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்,பரிமளாவினை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கண்ணனை தேனி போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

தனிக்குடித்தனம் வாங்கிய காவு

தனிக் குடித்தனம் செல்ல மனைவியின் பிடிவாதம் – 2 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி தற்கொலை – தீக்குளித்து இறந்த பரிதாபம்

அல்லிநகரம்,டிச.26 – 2009. செய்தி – தினத்தந்தி. (படம்: தினமலர்)

தேனி அல்லிநகரத்தில் 2 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூட்டுக்குடும்பம்

தேனி அல்லிநகரம் குள்ளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரமேஷ்(வயது32). இவரது மனைவி முத்துலட்சுமி(23), இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. கோவர்த்தனன் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது. ரமேஷ் தனது தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

வீட்டின் மாடியில் ரமேஷ், முத்துலட்சுமி ஆகியோர் 2 வயது குழந்தையுடனும், கீழ் பகுதியில் ரமேசின் பெற்றோரும் வசித்து வந்தனர். மேலும் கடந்த 2 மாதத்துக்கு முன்புவரை தேனியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த ரமேஷ் அந்த வேலையில் இருந்து நின்று விட்டு, வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டெய்லராக வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில் முத்துலட்சுமி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. அதற்கு மாமியார் இந்திராணி மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தனிக்குடித்தனம் செல்வதென்றால் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பணம் தேவை என்று கூறி தனிக்குடித்தனம் செல்ல வேண்டாம் என அவர் மகனிடம் கூறியுள்ளார்.

தற்கொலை முடிவு

இதனால் குடும்பத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மாமியார், மருமகள் இடையே அடிக்கடி சண்டை நிலவி வந்ததால் என்னசெய்வது என்ற குழப்பத்தில் ரமேஷ் பரிதவித்தார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் ரமேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உணவருந்தி விட்டு மாடிக்கு சென்று உள்ளார். அங்கு மனக்குழப்பத்தில் இருந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

அப்போது தாங்கள் இறந்த பிறகு 2 வயது குழந்தையை அனாதையாக விடவேண்டுமா என கருதி அந்த குழந்தையுடன் சேர்ந்து தீக்குளித்து இறந்து விடுவது என முடிவு செய்து,அருகில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து குழந்தை மற்றும் மனைவி மீது ஊற்றி விட்டு தன் மீதும் ரமேஷ் ஊற்றிக்கொண்டு தீ வைத்தார்.

இதில் அவர்கள் 3 பேரின் உடலிலும் தீ மளமளவென பரவியது. வலி தாங்காமல் அவர்கள் அலறவே அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது 2 வயது குழந்தை கோவர்த்தனன் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்து விட்டான். கணவன் -மனைவி இருவரும் தீயில் கருகி உயிருக்கு போராடினர்.

பலி

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பலியான குழந்தை மற்றும் உயிருக்கு போராடும் கணவன்-மனைவி இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலையில் இறந்தனர்.

இதனை அடுத்து உடல் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களும் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கிடாசலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து பலியான முத்துலட்சுமியின் தாயார் ராஜம் அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார்.

வழக்கு பதிவு

அவர் தனது புகாரில், மாமியாரின் கொடுமை காரணமாக தனிக்குடித்தனம் செல்ல முடியாததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசின் தாயார் இந்திராணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான துயர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

======================
Follow-up:
======================

ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம்:
தற்கொலைக்கு தூண்டியதாக மாமியார் கைது

அல்லிநகரம்,டிச.27 – 2009. செய்தி – தினத்தந்தி.

தேனி அல்லிநகரத்தில் 2 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி தீக்குளித்து இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

(சரி. அந்தக் கணவனை தற்கொலைக்குத் தூண்டியது யார்? மனைவி தனிக்குடித்தனம் போக அவளுக்கு தூபம் போட்டது யார்? பொருளாதாரம் போதாது என்று யதார்த்த காரணங்களைக் கூறிய மாமியார் கைது! தனிக்குடித்தனம் போக நச்சரிக்கக் காரணமானவர்கள் யார் என்பதைக் கேட்க நாதியில்லை. எனெனில் ஆண் உயிர் இந்நாட்டில் செல்லாக்காசு. மகனைப் பெற்றவர்களுக்கு கொலை, இல்லையானால் கைது -இதில் ஏதாவது ஒன்று நிச்சயம் கிட்டும். ஜெய் ஹிந்த்!)

தற்கொலை

தேனி அல்லிநகரம் குள்ளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரமேஷ்(வயது32). இவரது மனைவி முத்துலட்சுமி(23). இவர்களுக்கு கோவர்த்தனன் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் முத்துலட்சுமி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து தனது 2 வயது குழந்தையுடன் ரமேசும், அவரது மனைவி முத்து லட்சுமியும் நேற்று முன்தினம் தீக்குளித்து பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமியின் தாயார் ராஜம் தேனி அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார்.

மாமியார் கைது

அவர் தனது புகாரில், முத்துலட்சுமியின் மாமியார் இந்திராணி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்று வரதட்சணை கேட்டு எனது மகளிடம் தகராறில் ஈடுபட்டதால் மனம் உடைந்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து அல்லி நகரம் போலீசார் ரமேஷ் மற்றும் முத்துலட்சுமி மீது 2 வயது குழந்தையை கொலை செய்ததாக வழக்கும், அவர்கள் இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக இந்திராணி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் விசாரணைக்காக அழைத்து வந்த மாமியார் இந்திராணியை நேற்று போலீசார் கைது செய்து உள்ளனர்.
=============

ஆணைப் பெற்று திருமணமும் செய்து கொடுத்தால் அந்தத் தாய்க்கு கைது, சிறைவாசம் கியாரண்டி!

மகனைப் பறி கொடுத்த துக்கம் பெரிதா, அந்திக் காலத்தில் நல்ல அறிவுரை கூறியதற்காக கைதாகி சிறையில் வாடும் கொடுமை பெரிதா அந்தத் தாய்க்கு?

மகனைப் பெற்றவுடனேயே அந்தத் தாய்க்கு “பெண்” என்னும் நிலை பறிபோய் “குற்றவாளி” என்ற நிரந்தரப் பட்டம் கிட்டிவிடுகிறது! இது அந்த ஆண்மகனின் உடன்பிறந்த பெண்களுக்கும் பொருந்தும்!!

இந்தப் போக்கு எதில் போய் நிற்கப் போகிறது? நீங்களே கூறுங்கள்!

கூடு விட்டுக் கூடு பாயும் சூப்பர் வீராங்கனை!

”முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவன் கைது. திருமணம் ஆனதையே மறைத்திருந்தார் வாலிபர். தாலி கட்டும் முன் பிடிபட்டார். அவரை உடனே சிறையில் அடைத்தார்கள்”

“காதலியை கைவிட்டு இன்னொருவளைத் திருமணம் செய்ய முயன்ற வாலிபனைப் பிடித்துக் கொடுத்தார் தீரமிக்க காதலி. தாலி கட்டுமுன் வாலிபன் கைது”

“திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்து ஏமாற்றி இன்னொருவளைத் திருமணம் செய்ய முயன்ற காதலன் கைது. சரியான நேரத்தில் புகார் கொடுத்தாள் இளம் பெண். மணக்கோலத்தில் கணவன் கைதானதால் பெரும் பரபரப்பு”

இப்படிப்பட்ட செய்திகளைத்தான் நாம் தினமும் வாசித்துக் கொண்டிருக்கிறோம். உடனே “கொல்லணுய்யா, இந்தப் பசங்களை. வெட்டணுய்யா” என்று சூளுரைத்து “பாவம் அந்த அபலைப் பெண்கள்” என்று சொட்டுக் கண்ணிர் விடுவது நம்மூர் ஜொள்ளீஸ்வர ஆண்களின் வழக்கம்.

இந்திய நாட்டு சட்டப்படி ஒரு திருமண உறவு உயிரோடு இருக்கும்போது இன்னொரு திருமணத்தை செய்து கொண்டால், அது ஆணோ, பெண்ணோ, அது சட்டப்படி குற்றம். உயிருடன் இருக்கும் துணைவரின் சம்மதத்துடன்தான் இன்னொரு திருமணம் சாத்தியம்.

ஆனால் நடைமுறையில் இது ஆணுக்கு மட்டும்தான் அமல் செய்யப்படுகிறது. அதே குற்றத்தை ஒரு பெண் செய்தால் வெறும் அறிவுரை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். “இம்” என்றால் கைது என்பது ஆணுக்கு மட்டும்தான்.

அதனால்தான் சுதா ராமலிங்கம் என்னும் வக்கீல் ஒரு டி.வி பேட்டியில் “என்ன, ஒரு 15 நாள் ஜெயிலில் இருந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்” என்று ஆண்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பார்த்து “அஸால்டாக” கேட்டார்!

இப்போது இந்த செய்தியை வாசித்துவிட்டு யாருடைய பரிதாப நிலைக்காக கண்ணீர் விடுவது என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்:

மோசடி மனைவி மீது புகார் செய்த 3-வது கணவர் மீது சரமாரி தாக்குதல்
3 பேர் கைது

ஊத்தங்கரை, டிச.27 – 2009. செய்தி – தினத்தந்தி

ஊத்தங்கரை அருகே மோசடி மனைவி மீது புகார் செய்த 3-வது கண வர் சரமாரியாக தாக்கப் பட்டார். இது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் திருமணம்?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊமையனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு, கல்லுடைக்கும் தொழிலாளி. இவரது மகள் செல்வி (எ) நிர்மலா (வயது 19). இவருக்கும், சேலம் மாவட் டம் தாரமங்கலத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கணவனை பிரிந்து நிர்மலா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர், கணவனை விவாகரத்தும் செய்து விட் டார்.

அதைதொடர்ந்து, போச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரை 2-வதாக நிர்மலா திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவருடன், சந்தோஷமாக குடும்பம் நடத்திய நிர்மலா வுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது.

2-வது கணவருக்கு `டாட்டா’

கணவரிடம் விடைபெற்று தாய் வீட்டுக்கு வந்த நிர்மலா, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டார். அத்துடன், கணவனையும் மறந்து விட்டார். பெற்றோரும் அறிவுரை கூறி நிர்மலாவை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை.

மாறாக, நிர்மலாவுக்கு 3-வதாக திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. அதாவது, 2-வது திருமணத்தை மறைத்து 3-வது திருமணத்துக்கு திட்டம் போட்டனர். உறவினர்கள் வேலுசாமி, ராசாத்தி, முனியம்மாள், லட்சுமணன் உள்பட 6 பேர் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரம் காட்டினார்கள். அதன்படி, ஊத்தங்கரை அடுத்த பாம்பாறுஅணை பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (28) என்பவருடன் 3-வது திருமணம் நடந்தது.

கோவிலில் 3-வது திருமணம்

ஊத்தங்கரையில் உள்ள ஒரு கோவிலில், உறவினர்கள் முன்னிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் நிர்மலா 3-வது திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் 2-வது கணவர் வேலுக்கு தெரியவந்தது. அவர், பாம்பாறு அணை பகுதிக்கு வந்து ஆறுமுகத்திடம் என் மனைவியை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டு தகராறு செய்துள்ளார்.இதில், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை ஆறுமுகம் உணர்ந்தார்.

போலீசில் புகார்

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். புகாரில், ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து, மோசடி செய்த நிர்மலா மற்றும் அவர்களது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிந்தார்.

போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே, நிர்மலாவின் உறவினர்கள் சேர்ந்து ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக, சப்- இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குபதிவு செய்து நிர்மலாவின் உறவினர்கள் லட்சுமணன் (37), சண்முகம் (35), சரவணன் (30) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

(ஆனால் நிர்மலா மட்டும் கைதாகவே மாட்டார்! இதையே ஆண் செய்திருந்தால்….?).

இன்னும் ஒருசில ஆண்டுகளில் ஆண்சிசுக்கொலை பெருமளவில் நிகழும் சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன!

என்.டி.திவாரிக்கு ஒரு நீதி, தேவநாதனுக்கு ஒரு நீதியா?

”ஐயோ பாவம் லெலின்!”

யார் அந்த லெனின்?

அவர்தானய்யா தினமலர் செய்தி ஆசிரியர். சில மாஜி நடிகைகள் புகார் கொடுத்ததால் “பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமை” சட்டத்தில் கைதானவர்!

ஒரு செய்தியை நாளிதழில் பிரசுரித்ததற்காக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தில் கைது ஆனார் அந்த லெனின். ஆனால் என்.டி.டிவாரி என்ன ஆனார்?

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறையில் காமக் கேளிக்கை நடத்தினான் என்று கைது செய்யப்பட்டு, செக்ஸ் கொடுமை, வன்கொடுமை என்று ஏராளமான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளப்பட்டிருக்கிறான். அவன் செய்த தவறுக்கு அவனுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கட்டும். ஆனால் அவனைத் தேடி வந்து சுகம் அனுபவித்த பெண்குலத் தேவதைகளெல்லாம் இப்பொது பத்தினி ஆகி விட்டனரே, அது எப்படி!

பாவம் அந்த அபலைப் பெண்கள். கபடு சூதில்லாமல் நாக்கை நீட்டியிருக்கிறார்கள்; அதில் போய் ஏதோ மன்மத குளிகையைத் தடவி விடலாமா, அந்த காமாந்தகாரன்? இன்னும் சிலருக்கு மருந்து கலக்கி குளிர் பானம் வேறு கொடுத்தானாம். ஒண்ணுமே தெரியாத அந்தப் பேதைகளை எப்படி ஏமாற்றியிருக்கிறான், பாருங்கள்!

சரி. அவன்தான் கொடுத்தான். இவர்கள் ஏன் குடித்தார்கள்? அவனைத்தேடி மீண்டும் மீண்டும் அந்தப் பெண்கள் சென்றார்களாம். அவன் மீண்டும் மீண்டும் இவர்களைக் ”கற்பழித்தானாம்”!! “கற்பு” என்பதற்கு ஒரு புதிய பாஷ்யமே எழுதுகிறார்கள் இந்த அபலைகள். அதுவும் அவர்கள் எப்போது புகார் கொடுக்கிறார்கள்? அந்த தேவனாதன் சிக்கிய பிறகு – முன்னதாக இல்லை!

சரி, அவர்கள் எப்படியோ போகட்டும். நாம் இப்போது என்.டி.டிவாரிக்கு வருவோம்.

தேவநாதன் கோவில் கருவறையில் உல்லாசம் செய்தான், அது சிடி-யாக வந்தது. அதை ஒரு டிவி சேனலில் ஒளி பரப்பினார்கள். அவன் கைது செய்யப்பட்டான்.

என்.டி.டிவாரி கவர்னர் மாளிகை என்னும் மக்களாட்சியின் புனித இடத்தில் இளம் பெண்களுடன் அரவணைப்பில் இருந்ததாக ஒரு டிவி சேனலில் படம் காண்பித்தார்கள். அவருக்கு மட்டும் தேவனாதனுக்கு நடந்த சடங்குகள் ஏன் நடைபெறவில்லை? இந்த நாட்டில் கவர்னருக்கு ஒரு சட்டம், சாதாரண மனிதனுக்கு வேறொரு சட்டமா? குற்றம் ஒன்று தானே?

திவாரி மேட்டரின் மேல் விவரங்களுக்கு செல்க: இங்கே. ஓடும் படம் இங்கே!

சென்ற வெள்ளிக்கிழமை (25-12-2009) கிறிஸ்துமஸ் லீவு. தொடர்ந்து வார விடுமுறை. அதனால் வியாழனன்று மாலை ஒரு சாதாரணக் குடிமகன் கைது செய்யப்பட்டால் அவனது அடிப்படை உரிமையான பெயில் எடுப்பதற்கு திங்கள் காலை வரையில் காத்திருக்க வேண்டும். இடையில் உள்ள 3 நாட்களுக்கு மேல் போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்பில் தான் கிடக்க வேண்டும். அது பெட்டி கேசாக இருந்தாலும் சரி. பொய் 498A கேசுகளில் கைது ஆகும் அப்பாவி மாமனார், மாமியாராக இருந்தாலும் சரி. அவர்களுக்கு இந்த கதிதான்.

ஆனால் திவாரிக்கு மட்டும் அவசர அவசரமாக ஜட்ஜ் வீட்டில் கூடி, ஒரு மணி நேரத்திற்குள் அந்தப் படங்களை டி.வி சேனலில் காட்டக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இந்த சுறுசுறுப்பை எல்லா கேசுகளிலும் காண்பித்தால் நம் நாட்டு கோர்ட்டுகளில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கி நிற்காதே! ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டிய விவாகரத்து வழக்குகள் 15 ஆண்டுகள் வரை ஜவ்வாக இழுக்கப்படுகின்றனவே. திவாரிக்காக மட்டும் மின்னல் வேக நடவடிக்கை ஏன்? அதுவும் பொது நல வழக்காம்! எது பொது நலம்?

நம் நாட்டில் பெண்களுக்காகவே அனுதினமும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் (AIDWA) இந்த விவகாரத்தை கையிலெடுத்துப் பெரிதாக்கி திவாரிக்கு எதிராக சட்டபூர்வ நவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட போராடுவார்களா? இல்லை, அவர்கள் செயல்பாடு எல்லாமே நடுத்தர வர்க்க ஆண்கள் மற்றும் ஆண்களைப் பெற்ற தாய்மார்களை பொய் வரதட்சணை கேசில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பவது மட்டும் தானா?

இதே என்.டி.டிவாரி முன்பு இன்னொரு சிக்கலில் மாட்டினார். ரோகித் சேகர் என்னும் 29 வயது இளைஞர் தனது உண்மையான தந்தை என்.டி.டிவாரிதான் என்று டில்லி உயர்நிதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் காலம் கடந்து வழக்குத் தொடர்ந்திருப்பதைக் காரணம் காட்டி சென்ற மாதம் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த ரோகித்தின் தாய் உஜ்வால சர்மா, தான் கணவனிடமிருந்து பிரிந்து தனியாக வாழும்போது திவாரியுடன் ஏற்பட்ட உறவினால் பிறந்தவர் ரோகித் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது ஹரியாணாவில் 19 ஆண்டுகளுக்கு முன் ருசிகா என்னும் பெண்ணை மானபங்கப்படுத்தி தற்கொலைக்குத் தள்ளிய போலீஸ் டி.ஜி.பி எஸ்.பி.எஸ்.ராதோட் என்பவர் மீது இன்னும் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராடிவரும் AIDWA தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான திருமதி. பிருந்தா காரத் அவர்கள் இந்த ரோகித் சேகரின் தாய் உஜ்வால சர்மாவின் வழக்கையும் கையிலெடுத்து அவர்களுக்கும் நியாயம் கிடைக்கப் போராடுவாரா? திவாரியால் வஞ்சிக்கப்பட்டதாக குமுறும் அந்தப் பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேண்டாமா?

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்!

”மாமியார்” தானே, பரவாயில்லை. நம் நாட்டுச் சட்டங்களின் பார்வையில் மாமியார் பெண்ணினத்தில் சேரமாட்டார்! அப்படித்தானே ஐயா, குடும்ப வன்முறைச் சட்டம் சொல்கிறது!

ஐயகோ, இந்த நாட்டில் ஒரு மருமகளுக்கு தன் மாமியாரைக் கொலை செய்யக்கூட உரிமை இல்லை என்கிறார்களே!

கட்டாயம் இந்தக் கோரிக்கையை பெண்ணியவாத இயக்கங்கள் கையிலெடுத்துப் போராடி, 498A, DV Act, மெயிண்டெனென்ஸ் (செக்‌ஷன் 125) போன்ற ஒருதலைப் பட்சமான சட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுபோல் இந்த உரிமையையும் பெற்றுத்தர வேண்டும். அப்பொதுதான் நம் நாட்டுப் பெண்களை முழுமையாக ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து விடுதலை செய்வித்ததாக பெருமைப்படலாம்!

இப்போது செய்தி:-

அன்னவாசல் அருகே பயங்கரம். மாமியாரை அடித்து கொன்ற மருமகள்

இலுப்பூர், டிச. 22 – 2009. செய்தி – மாலைமலர்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை உருவம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது30). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள முத்துலட்சுமியின் தாய் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுப்பிரமணி மனைவியிடம் தகராறு செய்து விட்டு தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இதனால் சுப்பிர மணியனின் தாய் ரங்கம்மாளுக்கும் (65) முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி ரங்கம்மாளுக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாய்தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த முத்துலட்சுமி கையால் ரங்கம்மாளை தலையில் அடித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரங்கம்மாள் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அக்கம் பக்கத்தவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ரங்கம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் அன்னவாசல் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி முத்துலட்சுமியை கைது செய்தனர்.

குடும்ப தகராறில் மாமியாரை மருமகளே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் கணவன் தற்கொலை

குடும்பச் சச்சரவு காரணமாக கண்வன்மார்கள் தற்கொலை செய்துகொள்வது இப்போது மிகவும் அதிகமாக இருக்கிறது. உண்மையில் நம் நாட்டில் மணமானவர்கள் தற்கொலை எண்ணிக்கையின்படி மனைவிகள் தற்கொலையைவிட கணவர்களின் தற்கொலை இரண்டு மடங்கு.

அரசே அளிக்கும் இந்தப் புள்ளிவிவரத்தைக் காணுங்கள் (ஆதாரம் – National Crime Records Bureau):-

கணவர்கள் தற்கொலை எண்ணிக்கை

ஆனால், பெண்கள்தான் அதிக அளவு (கணவன்மார்களால்) தற்கொலைக்குத் தள்ளப்பட்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்தி, அந்த பொய்யான மாயத்தோற்றத்தின் அடிப்படையில் மேன்மெலும் பல ஆணழிப்பு வன்கொடுமைச் சட்டங்களைப் போட்டு, வெறும் புகார் கொடுத்தவுடனேயே கணவனைக் கைது செய்து கொடுமைப் படுத்தும் போக்கு நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இதனால் நம் நாட்டு ஆண்களும் அவர்களைப் பெற்றவர்களும் திருமணம் என்றாலே பயந்து ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுனர்.

மேலும் ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு கணவனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்யப்பட்டு அதற்கென்று ஒரு விசாரணை நடத்துவது சட்டத்தின் கட்டாயம். அதுபோன்ற 99.99% நிகழ்வுகளில் கணவனைக் குற்றவாளியாக்கி உள்ளே தள்ளி விடுகிறார்கள்.

ஆனால் ஒரு கணவனின் தற்கொலைக்கு மனைவிதான் காரணம் என்று வெட்டவெளிச்சமாகத் தெரிந்தாலும் அந்தப் பெண்மணி மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது நிதர்சனம்.

இதுபோன்ற ஓரவஞ்சனை தொடருமானால் ஒருசில ஆண்டுகளில் நம் சமூகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் தோன்றும் என்பது சரித்திரம் காட்டும் உண்மை!

இப்போது ஒரு அசட்டு கணவனின் செய்கையைப் பற்றி படிப்போம்!

மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு
தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

குஜிலியம்பாறை, டிச.23 – 2009. செய்தி – தினத்தந்தி

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால், வாலிபர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடும்பம் நடத்த வர மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள சீரங்கம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது25). இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த நாகம்மாள் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த 6 மாதங்களாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாள், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு நாகம்மாள் வர மறுத்துவிட்டார்.

தற்கொலை

இது தொடர்பாக ஊர்காரர்கள் பேசி பார்த்தனர். ஆனாலும் நாகம்மாள் தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதில் மனம் உடைந்த பெருமாள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் குஜிலியம்பாறை போலீஸ் சப்.-இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ளக்காதலை நேரில் பார்த்த மாமனார் வெட்டிக்கொலை

கொடுமுடி அருகே பயங்கரம்
கள்ளக்காதலை நேரில் பார்த்த மாமனார் வெட்டிக்கொலை
மருமகள்-கள்ளக்காதலன் கைது

கொடுமுடி, டிச.22 – 2009. செய்தி – தினத்தந்தி

கொடுமுடி அருகே கள்ளக்காதலை நேரில் பார்த்த மாமனார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மருமகள் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

ஈரோடு மாவட்டம் நொய்யல் சோதனைச்சாவடி அருகே உள்ளது அம்மன்புதூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). விவசாயி. இவரது மனைவி ரஞ்சிதம். இவருக்கு ஆனந்த் (35), பரமு என்கிற பரமசிவம்(30) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் பரமசிவம் ஊட்டியில் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார்.

சண்முகம் தனது மூத்தமகன் ஆனந்த், அவரது மனைவி இளவரசி (30) ஆகியோருடன் அம்மன்புதூரில் வசித்து வந்தார்.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சண்முகமும், அவரது மருமகள் இளவரசியும் இருந்தனர். ஆனந்த் ஊட்டிக்கு சென்று விட்டார். நள்ளிரவு சண்முகம் தனது வீட்டின் பின்புறத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பிணத்தை, போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்துக்கு பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கள்ளக்காதல்

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்முகத்தின் மருமகள் இளவரசிக்கும், கரூர் மாவட்டம் வாங்கல் என்ற ஊரைச்சேர்ந்த சம்பத்குமார்(35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிய வந்தது.

நேற்று முன்தினம் இரவு இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்ததால் சண்முகத்தை, சம்பத்குமார் அரிவாளால் வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கள்ளக்காதலனுடன் கைது

இதையொட்டி போலீசார் சம்பத்குமார், இளவரசி ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் கொடுமுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.